Thursday, June 24, 2010

இது எப்படி இருக்கு?

வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு
போனால் வராது
போகட்டுமே

கேள்வி

நான் பேசுகிறேன்
நீ கேள்
கேள்வி ஞானம்

பெண்

கண்ணை மூடிக்கொண்டு சம்மதித்தேன்
கண்ணைத் திறந்தேன்
பெண்ணைக் காணவில்லை

அழகு

அழகியின் முன் அழகற்றவனாக நினைக்கிறேன்
அழகற்றவளின் முன் அழகனாக நினைக்கிறேன்
நான் அழகனா அழகற்றவனா?

போலி நாகரிகம்

சும்மாச் சொன்னேன் என்றார்
சும்மாப் போய்யா என்றேன்
விளையாட்டுக்குச் சொன்னேன் என்றார்
விளையாடாதே என்றேன்
வருகிறேன் என்றார்
போ என்றேன்
போலி நாகரிகம் புளிச்சுப்போச்சு

வீடு

சொந்த வீடு வேற
வாடகை வீடு வேற
தூக்கம் அதே தான்

பாட்டுக் கச்சேரி

சிறுநீர் கழிக்கச் சென்றவர்
இருக்கையில் செவிகளை விட்டுச் சென்றார்
பாட்டுக் கச்சேரி பிரமாதம்

தமிழ் மீது கோபம்

தமிழ் மீது கோபம் எனக்கு
அழகான ழ தனை
வரவிடாமல் பலருக்கு
அழ விடுகிறது என்னை

Wednesday, January 13, 2010

என் காதல் கவிதைகள் - பார்த்துக்கொண்டே இருப்பேன்

காதலியின் வருணனை மற்றும் தனது உறுதிமொழி இவை ஒருங்கிணைந்த பாடல்.

பார்த்துக்கொண்டே இருப்பேன்
உன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்

கனி இதழ்களில் குறுநகை அதை என்றும்
கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்

உன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்

கரு விழியாள் காதலி நீ ஒரு கணமும்
கண் கலங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்

உன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்

உயிருக்கு உயிரான உன்னை
உயிருள்ளவரை பார்த்துக்கொண்டே இருப்பேன்

உன்னை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்

Sunday, September 21, 2008

என் காதல் கவிதைகள் - தெரியவில்லை, புரியவில்லை

பிரிவில் வாடும் காதலன் தன் ஏக்கம் வெளிப்படுத்தும் பாடல்.

தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை
மனக்கண்முன்னே நிற்கும் கனிமுகத்தை
என்முன்னே கொண்டு வரத்தெரியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

காற்றோடு தூது சொல்ல பாஷை தெரியவில்லை
மாயமந்திரம் ஏதும் அறியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

அந்த இனிய முகத்தை வரையத்தெரியவில்லை
சிலை வடிக்கும் திறனுமில்லை

தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை
மனக்கண்முன்னே நிற்கும் கனிமுகத்தை
என்முன்னே கொண்டு வரத்தெரியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

Friday, September 19, 2008

என் இனிய தமிழ்

என் தமிழ் Blog-ஐ கவி கண்ணதாசனின் வரிகளுடன் ஆரம்பிக்கிறேன்.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

மெய், வாய், கண், மூக்கு, செவி அனைத்திற்கும் ஓர் அற்புத விருந்து. நெஞ்சை நெகிழ வைக்கும் இசைஅமைப்பு மற்றும் உணர்ச்சிகளைப் பிழியும் பின்னணிக்குரல்கள்.

இந்த அருமையான பாடலை நான் பலமுறை நண்பர்களோடு பாடியிருக்கிறேன். கண்ணதாசனின் கவிதைகளை ஆராய்ந்து அனுபவிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.

என் காதல் கவிதைகள் - சும்மா சும்மா

எழுதும்பொழுதே மெட்டமைத்துப்பாடுவது ஒரு தனி சுகம். காதலிக்கு சுதந்திரமும் தைரியமும் தரும் காதலனின் பாட்டு. கிராமிய பாணியில் பாடிப்பாருங்கள்.

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு
சொகமா விஷயம்
ஜொரம் வந்தா வரட்டும்
சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு

பூட்டுப்போட்ட வீட்டுக்குள்ள
புகுந்துடலாம் கஷ்டமில்ல
மனச மட்டும் பூட்டிப்புட்டா
புரிஞ்சுக்க ஒரு வழியுமில்ல
(சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு)

நினைப்பதொண்ணு உரைப்பதொண்ணு
நிறம் மாறும் உள்ளங்கள் உண்டு
நல்ல மனதில் வளர்வதெல்லாம்
நல்லதாத்தான் இருக்கும் பொண்ணு

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு
சொகமா விஷயம்
ஜொரம் வந்தா வரட்டும்

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு